நன்கு நீர்த்த நிலையில் வேர்கடலை கரைசலை இளம் நாற்றுகளுக்கு பயன்படுத்தலாமா? கரைசலை தாங்கி வளருமா?

 கேள்வி:


வேர்கடலை கரைசல் செடிகளுக்கு நல்ல பலனைத் தந்தது. இப்பொழுது தக்காளி, மிளகாய் ரகங்களை நாற்று விட்டுள்ளேன்.


அவற்றில் சில நல்ல வளர்ச்சியும் சில வளர்ச்சி இல்லாமலும் உள்ளது. நன்கு நீர்த்த நிலையில் வேர்கடலை கரைசலை இளம் நாற்றுகளுக்கு பயன்படுத்தலாமா? கரைசலை தாங்கி வளருமா?


மானேரி பாலா:


இந்த கேள்வியை படித்ததும் எனக்கு சில வருடங்களுக்கு முன் மக்கள் TV யில் மலரும் பூமி நிகழ்ச்சி தான் ஞாபகம் வந்தது.


அதிக அளவில் நாற்றுக்கள் தயாரித்து விற்பவர் குழி தட்டிற்கான மண் தயாரிப்பை பற்றி விவரித்தார். மண் விலை அதிகம் என்பதாலும், தென்னை நார் கழிவு விலை குறைவாகவும், நாற்று விடுவதற்கு ஏற்ற ஊடகமாக இருப்பதாகக் கூறி வழிமுறைகளை விளக்கினார்.


Pleurotus என்ற காளான் வித்தைக் கொண்டு தென்னை நார்க் கழிவை மக்கவைத்து அத்துடன் ரசாயன உரங்கள் உயிரியல் ஊரங்கள் கலந்து தயாரிக்க ஒரு வருடம் எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.


குழி தட்டில் சிறிய குழியாக இருக்கும். அதில் இருக்கும் சிறிய அளவு ஊடகம் செடி வளர்ச்சி தேவைக்கு அனைத்து சத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


செடி வளர்ப்பிற்கு எப்படி ஆறப்போட்டு பக்குவபடுத்தப்பட்ட மண் எவ்வளவு முக்கியமோ அப்படித்தான் நாற்று விடுவதற்கும் மண் வளம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


Inside story of roots வேரின் உட்கதையை சற்று பார்ப்போம்.


ஒர் வித்திலை இரு வித்திலை என்று இரு வகையாக தாவரங்களை பிரிக்கலாம். இரு வகையிலும் செடி முதலில் முளைத்ததும் வேர் அதிகம் இல்லாத நிலையில் தன்னை ஸ்தாபிக்க விதை பகுதியில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்ளும். இரு வித்திலை செடியில் இதன் விதை இரண்டாக பிளந்து மையத்தில் இலைகள் இருப்பதை பார்க்கலாம். ஒர் வித்திலையில் ஒரு தண்டாகத் தான் பார்க்க முடியும். கரும்பு, நெல், மக்காச்சோளம், சிறு தானியங்கள் இவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.


நாற்றில் வேர் ஆரம்ப வளர்ச்சி பெறும் போது தான் True leaves என்று சொல்லப்படும் செடிகளுக்குரிய இயல்பான இலை தோன்றும். அதன் பின்னரே செடிகள் ஊடகத்திலிருந்து வேரின் மூலம் சத்துக்களை எடுத்துக் கொள்ளும்.


இந்த நிலையில் வேர்கள் சொர்ப்பமாகவும் மென்மையாகவும் தாய் மண்ணைச் சார்ந்து இருக்கும். இந்த தாய் மண்ணில் இருக்கும் சத்துக்கள் செடிக்கு உகந்த நிலையில் இருந்தால் தான் அந்த இளம் செடியால் அவற்றை பயன்படுத்தி வளர முடியும். வேறு மேலுரம் இடுபொருட்களின் சத்துக்கள் செடிக்கு உகந்ததாக மாற கால அவகாசம் தேவை. அது மட்டுமின்றி அதன் வேகம் இளம் செடியின் வேர்களையும் செடியின் தண்டையும் கருகச் செய்து விடும். Damping off என்று சொல்லப்படும் நாற்றழுகல், கருகல் இதனால் ஏற்படுகிறது.


இதனால் தான் நாற்றுகளுக்கு மேல் உரம் இடாமல் வளர வாய்ப்பு அளிக்கும் வகையில் நாற்றிற்கும் வளமான பக்குவப்படுத்தப்பட்ட மண்/ஊடகம் அவசியமாகிறது.


இது மட்டுமல்ல நாற்றை மாற்றி நடும் போது அந்த வேற்று மண்ணும் பக்குவப்பட்ட நிலையில் இருத்தல் அவசியம். நாற்றை மாற்றும் போது தாய் மண்ணுடன் நடுவது அவசியம். புதிய மண்ணில் தன்னை ஸ்தாபித்து வளரும் வரை வேறு மேலுரம் தருவதை மேற்சொன்ன அழுகல்/ கருகல் நடைபெறாமல் இருக்க தவிர்க்கவும்.


கரைசல் நன்கு நீர்த்த நிலையில் சில நாற்றுகளுக்கு சோதனை முறையில் பயன்படுத்தி பார்க்கவும். ஒரு முறை இட்டால் 10-15 நாட்கள் இடைவெளியில் தேவைப்பட்டால் மற்றும் ஒரு முறை நீர்த்த கரைசலை பயன்படுத்தவும்.