மதராஸ் பாஷை சுவை தலபுராணம் - மெட்ராஸ் பாஷை Madras Tamil


மெட்ராஸ் பாஷை அல்லது மெட்ராஸ் மொழியை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றது தமிழ்த் திரைப்படங்கள்தான். 


குறிப்பாக,  என்.எஸ்.கே, சந்திரபாபு, சோ, நாகேஷ், மனோரமா, சுருளிராஜன், லூஸ் மோகன், ஜனகராஜ் எனக் காமெடி நடிகர்களே இதைக் கச்சிதமாகச் செய்தனர்.


1968 ம் வருடம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம்’  படத்தில்  மனோரமாவின் வா வாத்யாரே வூட்டாண்ட… நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...’ பாடல் மெட்ராஸ் பாஷையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.


தவிர, பல படங்களில் நடிகர்கள் சந்திரபாபுவும், சோவும் இன்னாமே, எப்டிகீற… குந்துமே… என்பது போன்ற வசனங்களைப் பேசுவதைப் பார்த்திருப்போம்.


எப்படி நெல்லைக்கும், மதுரைக்கும், தஞ்சாவூருக்கும், கோவைக்கும் தனித்துவமான பேச்சு மொழி இருக்கிறதோ, அதுபோலவே மெட்ராஸுக்கும் தனித்த பேச்சு மொழி இருக்கிறது. 


போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், முஸ்லிம்கள், பணி நிமித்தமாக வந்த மற்ற மொழியினர் எனப் பலதரப்பட்டவர்கள் இங்கே வந்ததும், வாழ்ந்ததுமே இதற்குக் காரணம்.


குறிப்பாக, தெலுங்கர்களும், முஸ்லிம்களும் நிறைந்திருந்ததால் தெலுங்கு மற்றும் உருதுச் சொற்கள் அதிகளவில் மெட்ராஸ் பாஷையில் இருப்பதை அறிய முடியும். 


அடுத்ததாக, ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும். ‘‘பிரிட்டிஷ்காரர்களின் முக்கிய வியாபார மையமாகத் திகழ்ந்த சென்னையில் ஆங்கிலம்,தெலுங்கு, கன்னடம், உருது, சிந்தி, குஜராத்தி, ராஜஸ்தானி எனப் பல்வேறு மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களும், அவற்றின் விளைவாக ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும் இம்மக்கள் பேசிய தமிழ் மொழியின் மீது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தின...’’


 என ‘சென்னையும், அதன் தமிழும்’ என்ற நூலின் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் இந்திரன்


மெட்ராஸ் பாஷையை ஒரு தரம்தாழ்ந்த மொழியாகக் கருதும் போக்கு தமிழர்கள் அனைவரிடமும் உள்ளது. 

நாவல்களிலும், சிறுகதைகளிலும் உயர்தட்டு மக்கள் சென்னைத் தமிழில் உரையாடுபவர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை

 தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும்கூட நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் பேசும் மொழியாகவே சென்னைத் தமிழ் பயன்படுவதைப் பார்க்கலாம்.


மெட்ராஸ் பாஷை என்றாலே பொதுவாக அனைவரின் நினைவிற்கும் சேரித் தமிழ்தான் வருகிறது. 


மெட்ராஸ் பாஷை கொச்சையானது என்றே பலரும் நினைக்கிறோம். 


ஆனால், அதனுள் செந்தமிழும் நிறையவே நிறைந்திருக்கிறது


பக்கமாக, அருகில் எனப் பொருள்படும் அண்டை என்ற வார்த்தையை, ‘அந்தாண்ட, இந்தாண்ட, வூட்டாண்ட…’ என எளிதாகச் சொல்வார்கள் சென்னைவாசிகள். 

அதாவது, அதன் அருகில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தம். 

சிலர், ‘மெய்யாலுமா?’ எனக் கேட்பார்கள். 

உண்மையாகவா? எனப் பொருள்படும் மெய் எனும் தூய செந்தமிழைப் பயன்படுத்துகின்றனர். 


இதேபோல, சிறப்பு எனும் பொருள் தரும் செம்மை’ என்கிற வார்த்தையை, செம மச்சி… செம டா’ என சுருக்கிச் சொல்கின்றனர்.  


சோறு துன்னலயா?’ எனச் சிலர் கேட்பதைப் பார்த்திருப்போம். 


சோறு என்னும் தமிழ் வார்த்தையை இன்று பலரும் அநாகரிகமான வார்த்தை எனத் தவிர்த்து வருகிறோம். 


ரைஸ் என்கிற ஆங்கில வார்த்தையோ அல்லது சாதம் எனும் வடமொழிச் சொல்லோதான் நாக்கில் சட்டென வருகிறது.


ஆனால், சென்னைவாசிகள் இன்றும் சோறு எனும் பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.


 துன்னு என்கிற வார்த்தை தின்னுதல் என்பதன் கொச்சை வடிவமாகும். 


தேடிச் சோறுநிதந் தின்று… என்ற பாரதி யின் வரிகளில் இருந்து இதை அறியலாம்.


இதேபோல, வலி, அப்பால் போன்ற வார்த்தைகள் பற்றி ‘சென்னைத் தமிழின் பன்முகத் தன்மைகள்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் அரவிந்தன் தரும் பதில்கள் சுவையானவை. 


‘‘வலி என்ற வார்த்தையை வேதனை என்றே நாம் பொருள் கொள்கிறோம். இலக்கியங்களில் வலி என்ற வார்த்தை, ‘அதிக விசை கொடு’, ‘இழு’, ‘தள்ளு’ போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இதை வைத்தே வலிமை, வலிது போன்ற வார்த்தைகள் வழக்கில் வந்தன. 

சென்னைத் தமிழில் மட்டுமே அந்த வார்த்தை இன்றும் அதே பொருளில் பேசப்பட்டு வருகிறது. 

உதாரணத்துக்கு, ‘வலிச்சிக்கினு வா’, ‘நல்லா வலி’ போன்றவை. 

ஆனால், வேதனை என்ற சொல் செந்தமிழுக்கு நெருக்கமாக ‘நோவு’ என்றே புழங்கி வருகிறது. 

வலிக்குது என்று பிற ஊர்களில் சொல்வதை சென்னையில் நோவுது என்றே சொல்வார்கள். 


Distance என்பதற்கான தமிழ்ச் சொல்லாக இன்றும் பல்வேறு ஊர்களில் தூரம் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் சென்னையில் அப்பால், தொலைவு என்கிற தமிழ்ச் சொல்லே பயன்படுத்துகின்றனர். 


அப்பால போய் நில்லு… எம்மாந் தொலைவு கீது’ போன்ற வார்த்தைகளே இதற்கு உதாரணங்கள்...’’ 


  அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படுவது அப்பீட்டு எனும் சொல். 


ஆளைவிடு, கிளம்பறேன் எனும் பொருளில் சென்னை வாசிகள் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

 

*இது ஆங்கிலச் சொல்லான abate இல் இருந்து வந்த வார்த்தை. 

அதாவது, விரைவாக வெளியேறு எனப் பொருள் படுகிறது. அதனாேலயே நான் அப்பீட்டு என்கின்றனர்.   


எழுத்தாளர் அரவிந்தன் தனது கட்டுரையில், ‘‘அப்பீட் என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுவது. 


தரையில் சுற்றும் பம்பரத்தின் ஆணியைச் சாட்டையால் அணைத்து, சாட்டையைச் சுண்டி பம்பரத்தைத் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிக்கும் செயலுக்கு அப்பீட் என்று பெயர். 


அது அப் ெஹட’ என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது என்ற தகவல் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலில் காணக் கிடைக்கிறது.


அப்பீட்டுக்கு எதுகை நயத்துடன் ரிப்பீட்டு என்னும் சொல்லும் அண்மைக் காலத்தில் புழங்கி வருகிறது.


இப்போ அப்பீட் ஆயிக்கறேன், அப்புறம் ரிப்பீட் ஆயிக்கறேன் என்று சொல்வதை யோசித்துப் பாருங்கள்.


அசால்ட் எனும் சொல் Assault என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். அதாவது, தாக்குதல் எனப் பொருள்படும்.


 அசால்ட் பண்ட்டாம்பா என்பது மோசமான தாக்குதலைக் குறிக்கச் சொல்கின்றனர். 

ஆனால், பல இடங்களில் இந்த அசால்ட் ‘எளிதாக’ எனும் பொருளில் பேசப்படுகிறது. உதாரணத்துக்கு, அசால்ட்டா முடிஞ்சிச்சு என்பார்கள்.  


மெட்ராஸில் சர்க்கரையை அஸ்கா என்றே குறிப்பிடுவர். இப்போதும் கூட சில இடங்களில் அஸ்கா இருக்கா என்று கேட்பதைப் பார்க்கலாம்.


இந்தப் பெயர் பின்னி அண்ட் கோ நிறுவனத்தால் வந்துள்ளது.இதுபற்றி, ‘அன்றைய சென்னைப் பிரமுகர்கள்-II’ நூலில் எழுத்தாளர் ராண்டார் கை குறிப்பிடுகிறார்.


‘‘1840ம் ஆண்டு வாக்கில், பின்னி அண்ட் கம்பெனி விவசாயம் சம்பந்தமான வியாபாரத்தில் இறங்கியது. 


ஒரிசா மாநிலத்தில் கூம்சூர் என்ற ஜமீன் சமஸ்தானத்திற்கு சொந்தமான எஸ்டேட் இருந்தது. 

அதன் பெயர் அஸ்கா.


 அங்கே ஒரு சர்க்கரை ஆலையை பின்னி நிறுவனம் நிறுவியது. 

அங்கிருந்து  வந்த வெள்ளை வெளேர் எனச் சுத்தம் செய்யப்பட்ட சர்க்கரைக்கு ‘அஸ்கா’ என்று பெயர்...’’ என்கிறார் அவர்.


இதுபோல, பேஜார் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். 

அதாவது தொடர்ந்து எரிச்சலூட்டுபவனை, உன்னோட பேஜரா போச்சு என்பார்கள். 


இது ஆங்கிலச் சொல்லான badger என்பதிலிருந்து வந்துள்ளது. 


அதாவது, அடிக்கடி எரிச்சலூட்டுபவன் எனப் பொருள்படும். 


சரியான பஜாரி எனச் சில பெண்களைச் சொல்வார்கள். 


இது உருது மொழியில் பஜார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். 


பஜார் என்றால் தமிழில் சந்தை. அங்குள்ள கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள் என்கின்றனர்.


இதேபோல பேக்கு என்ற வார்த்தையும் உருதிலிருந்தே மெட்ராஸ் பாஷையில் கலந்துள்ளது.

 பேவ்கூஃப்( bevkoof) என்ற வார்த்தையின் திரிபே பேக்கு! அதாவது, முட்டாள் என்பது இதன் பொருள்.


 போடா பேமானி என்பது மெட்ராஸுக்கே உரிய பழைய வழக்கு.

 இதுவும் உருதிலிருந்தே வந்துள்ளது. 


அதாவது, நேர்மையற்றவன், மானம் இல்லாதவன் என்ற பொருளில் வருகின்றது.


விசில் அடி என்பதை சென்னைவாசிகள் பிகிலு அடி என்பார்கள். விசிலும் ஆங்கிலம்தான். 


இருந்தும், இங்கே பிகிலு என்ற சொல் bugle என்பதிலிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். 


இராணுவத்தில் பயன்படுத்தும் ஒரு ஊதுகுழல் bugle. இதுவே பிகிலு என்று மருவி உள்ளது.  


டப்பு, துட்டு, கப்பு, கலீஜு, கஸ்மாலம், காண்டு, டோமர், கேப்மாரி, பாடு, உனக்கொஸரம், டார் ஆயிட்டான், மஜா, நாஸ்தா, ஜல்பு… என இன்னும் எத்தனையோ வார்த்தைகள் ஒலிக்கின்றன.


🤣🤣🤣

No comments:

Post a Comment