நண்பர் ஒருவர் தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.
விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.
பின் விருந்து உண்டவரிடம் "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "
என்று கேட்டார்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே
" கண்ணமுது கோவில் ,
கறியமுது விண்ணகர் ,
அன்னமுது வில்லிப் புத்தூர்
ஆனதே ,
எண்ணும் சாற்றமுது மல்லை ,
குழம்புமது குருகூர் ,
பருப்பதனில் திருமலையே , பார் "
என்றார்.
உடனே நமது நண்பர்
"ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக
இருக்கிறது என்று கூறி விட்டாரே "என்று
மிக மகிழ்ச்சி அடைந்தார்.
இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்
இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.
இதோ அந்த வைணவ நண்பர் கூறிய
பொருள்.
கண்ணமுது என்றால் பாயசம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.
அதனால் அடியில் சற்று அடிப் பிடித்து
இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து
இருந்ததாம்.
கறியமுது என்றால் காய்கறிகள்.
விண்ணகரில் இருப்பவன் உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே உப்பில்லாப் பண்டம்தான்.
அதாவது கறியமுதில் உப்பில்லை
என்பதே கறியமுது விண்ணகர்.
அன்னமது வில்லிப் புத்தூர்.
ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.
அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.
சாற்றமுது மல்லை.
மல்லை என்றால் கடல்.
கடல் நீர் உப்பு.
இங்கும் சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில் உப்பு அதிகம்.
குழம்பது குருகூர்.
குருகூர் என்றாலே புளி.
அதாவது குழம்பில் புளி அதிகம்.
பருப்பதில் திருமலை.
திருமலை எங்கும் கல்தான்.
இங்கும் பருப்பு முழுதும் கல்.
பாடல் எப்படி ?
குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக
கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.
இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.
No comments:
Post a Comment