சர்வ சுகந்தி மரம் Pimenta dioica | மருத்துவ பயன்கள் நிறைந்த சர்வ சுகந்தி மரம் | Allspice: Health Benefits | What are the health benefits of pimento?

சர்வ சுகந்தி மரம்  Pimenta dioica

    மேற்கிந்திய தீவுகள், (ஜமைக்கா)    உன் தாயகம்!.     உணவில் நறுமணம் கூட்டும் உன்னத இலை மரம் நீ! 59.அடி வரை வளரும் அழகு மரம் நீ!   குளிர் பிரதேசங்கள் உன் கூடாரம்! சோம்பு, ஏலக்காய்,கிராம்பு, பட்டை இவைகளின் நறுமணங்களை நீ தருவதால் ‘ஆல் ஸ்பைஸ்’ மரமானாய்!.

    அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வகை நாடுகளில் சமையலில் பயன்படும் இலை மரம் நீ!  ஆல் மசாலா, பலமசாலா,ஜமைக்காய் பெப்பர்  எனப்பல்வகைப்பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!ஜீரணசக்தி,

    வயிற்றுவலி,பல்வலி, மலச்சிக்கல்,தோல் வியாதி,வாய் துர்நாற்றம், வாயுத்தொல்லை,முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,எலும்பு முறிவு,ரத்த சர்க்கரை அளவு குறைப்பு,நீரிழிவு, இதய நலம்,வளர்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!    பிரியாணி சாப்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நறுமண நல்மரமே!

    தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படும் ஊடுபயிரே! ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கும் வேளாண் மரமே!   விதைகள் &பதியன் முறை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய மரமே!மிளகு வடிவ கனி கொடுக்கும் இலை மரமே!பச்சைநிற காய் கொடுக்கும் பசுமை மரமே!வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு மரமே!நறுமணம் மிகுந்த கற்பகமே!இரும்புசத்து,பொட்டாசியம்,தாமிர சத்து மிகுந்த மருந்து மரமே!

மாடித்தோட்டத்தில் வைக்கும் பைகளின் அளவு என்னென்ன செடிகள் வைக்கலாம்? Growbag sizes and selected plants for that growbags

12இஞ்ச் × 12இஞ்ச்

 (ஒரு அடிக்கு ஒரு அடி )

இந்த அளவுள்ள பையில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், தக்காளி, மணத்தக்காளி கீரை, புளிச்சைக் கீரை, இஞ்சி, மா இஞ்சி, மஞ்சள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற செடிகளும் கற்பூரவள்ளி எனும் ஓமவல்லி, துளசி, பிரண்டை போன்றவற்றையும் வைக்கலாம். 


12 இஞ்ச் × 15இஞ்ச்

 ஒரு அடிக்கு ஒன்னேகால் அடி

தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், கொத்தவரை போன்றவை ஒரு செடி மட்டும் வைக்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை போன்ற மூலிகைகள் வைக்கலாம். 


 

15 இஞ்ச் ×15 இஞ்ச்

 ஒன்னேகால் அடிக்கு ஒன்னேகால் அடி


 இதில் கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, குடைமிளகாய் போன்ற   அதிகப்படியான காய்கள் காய்க்கும் செடிகளை வைக்கலாம். இரண்டு செடிகள் வரை வைக்கலாம். சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, 

சர்க்கரைவள்ளி கிழங்கு

 போன்ற கிழங்கு வகைகளையும் இதில் வைக்கலாம்.

தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகைகள் இதில் தாராளமாக வளரும். 


15 இஞ்ச் × 9 இஞ்ச்

 கீரை பை கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, புதினா, வெந்தயம், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற அனைத்து சிறு வேர் அமைப்பு உள்ள கீரை வகைகளை வைக்கலாம்.

குறிப்பாக வெங்காயம், பூண்டு போன்றவைகளை  இதில் நன்றாக வளர்க்கலாம்.


18 இஞ்ச் ×18 இஞ்ச் 

( ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி )


இதில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடிக்காய் வகைகளையும், ரோஜா செடிகள்,  செம்பருத்தி போன்ற நீண்ட நாட்கள் வாழக்கூடிய பூ வகைகளையும் வைக்கலாம் , குண்டுமல்லி, முல்லை, போன்ற வகைகளை கொடியாகப் படர விடாமல் குத்துச் செடிகளாக கவாத்து செய்து வளர்க்கலாம். அகத்திக்கீரை, தவசிக்கீரை இரண்டுக்கும் இந்த அளவு மிகப் பொருத்தமானது.


24 இஞ்ச் × 24 இஞ்ச்


 இரண்டு அடிக்கு இரண்டு அடி


இதில் கொய்யா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா, வாழை, கறிவேப்பிலை, முருங்கை  போன்ற மர வகைகளும் மற்றும் பூச்செடிகளில் மல்லிகை வகைகளையும்,  திராட்சை கொடியையும் வளர்க்கலாம்...

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள் giving feedback without hurting

 நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.