வேளாண்மையில் இரு வகை
நஞ்சை
புஞ்சை
புஞ்சை வேளாண்மை மிக எளிது. விற்பனையில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.
இப்பொழுது நஞ்சை வேளாண்மை குறித்து காண்போம்.
தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் முறை நஞ்சை ஆகும்.
தண்ணீர் இல்லாதவர்களுக்கு நஞ்சை வேளாண்மை சாத்தியமா?
சாத்தியமே!!!
நஞ்சை வேளாண்மைக்கு நமக்கு தேவையான 4 விசயங்கள்:
1) விதைகள் & நாற்று
2) மூடாக்கு
3) மனித உழைப்பு
4) விற்பனை
நஞ்சை விவசாயிகள் அனைவருமே மேற்கூறிய 1,3,4 விசயங்களை நன்றாகவே அறிவர். இந்த 3 விசயங்களுக்கும் ஒரு பெரிய செலவு செய்வர். இந்த 3 விசயங்களிலும் தற்சார்பு இன்றி திரும்ப திரும்ப போராடுவர். இந்த உலகிலேயே மிகுதியாக சுரண்டப்படும் ஒருவர் என்றால் அது நம் நஞ்சை விவசாயியே.
ஏன் இந்த சிக்கல்?
மரபு விதைகளை மறந்ததன் விளைவு.
உடனே விவசாயிகளை திட்ட தொடங்க வேண்டாம். அவர்களால் தான் நாம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மரபு விதைகளை நுகர்வோர் புறக்கணித்ததன் விளைவே.
சரிங்க மீண்டும் நஞ்சை வேளாண்மைக்கு வருவோம்.
நம் தாத்தா பாட்டியின் தாத்தா பாட்டி காலத்தில் நஞ்சை புஞ்சை வேறுபாடு பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது உள்ளது.
அந்த வேறுபாட்டை குறைக்க வேண்டும்.
உடனடியாக இது சாத்தியமா என்றால் அது தெரியவில்லை.
அந்த வேறுபாட்டின் காரணம் என்ன?
காடு அழிப்பு.
மீண்டும் காடுகளை உருவாக்க வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் நஞ்சை வேளாண்மை எப்படி செய்வது?
ஒரு தாவரத்துக்கு காற்று சூரிய ஒளி சத்து என பொதுவானவை தாண்டி அடிப்படையாக ஒன்று தேவை.
ஈரப்பதம்
புஞ்சை வேளாண் பயிருக்கும் ஈரப்பதம் தேவையா என்றால்..
கொள்ளு நரிப்பயறு போன்றவற்றை காணும் பொழுது மேல்மண் மிகுந்த வெப்பத்துடன் காய்ந்து மிக வறண்டு காணப்படும். ஆனால் அவற்றின் வேர் மண்ணில் ஆழமாக சென்றிருக்கும். அங்கு அதற்கான ஈரப்பதம் இருக்கும். எந்த செடியின் வேருக்கும் ஈரப்பதம் அவசியம் தேவை. ஈரப்பதம் மட்டுமே கூட அனைத்து செடிகளுக்கும் போதுமானது. நெல்லுக்கு கூட தண்ணீரை நிறுத்தி வைக்க வேண்டிய தேவையில்லை. நெல்லின் சிறப்பு அது ஒரு தவளை போல தண்ணீர் தேங்கி இருந்தாலும் உயிர் வாழும்.
மீண்டும் அந்த 4 விசயங்களுக்கு வருவோம். பெரும்பான்மை நஞ்சை விவசாயிகள் குறிப்பாக இயற்கை விவசாயிகள் அந்த 1,3,4 விசயங்களில் போதுமான கவனம் செலுத்துகின்றனர்.
அந்த 2 வது விசயத்தில் இரசாயனம் கொண்டு வேளாண்மை புரியும் விவசாயிகள் கவனம் செலுத்துவதில்லை. பலருக்கும் அது குறித்த அறிவு இல்லை.
மூடாக்கு
மூடாக்கு என்றால் என்ன?
இதற்கான சரியான வரையறையை அதாவது வரையறை என்ற பெயரில் ஒரு வட்டத்துக்குள் அடக்க முயல்வது கொஞ்சம் முரணான ஒன்று என்றே எண்ணுகிறேன்.
ஓரளவு புரிதலுக்காக வரையறுத்து பார்ப்போம்.
ஒரு செடிக்கு அதனை சுற்றிலுமான பரப்பளவில் மட்கக் கூடிய விசயங்களை போடுதல் மூடாக்கு ஆகும்.
ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?
செடியை சுற்றிலும் உள்ள மண் மீது சூரிய ஒளி படும் பொழுது நாம் செடிக்கு பாய்ச்சிய தண்ணீர் ஆவியாகிறது. இந்த ஆவியாகி வீணாகும் தண்ணீரை தடுக்க அந்த மண் மீது மட்கக் கூடிய விசயங்களை போட்டு வைக்கலாம்.
நாம் சட்டை போடாமல் வெயிலில் 1 மணி நேரம் நின்றால் வியர்வையாக நம்முடைய உடலிலுள்ள நீர் வெளியேறும். சட்டை போட்டு நின்றால் வெயில் உடலில் நேரடியாக படாமல் சட்டையில் பட்டு மிக குறைவான வியர்வையே வெளியேறும். அதுபோலவே.
மட்கக் கூடிய விசயங்களை மட்டுமே மூடாக்காக போட வேண்டுமா?
வெயிலில் நீங்கள் பருத்தி சட்டையை அணிந்திருப்பதற்கும் ஒரு நைலான் சட்டையை அணிந்திருப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்களோ அதே வேறுபாட்டை அந்த செடி உணரும்.
மூடாக்கு விசயம் மக்களை அதாவது விவசாயிகளை ஏன் பெரிதாக சென்றடையவில்லை?
மூடாக்கு விசயத்திலுள்ள நடைமுறை சிக்கலே.
காடு அழிப்பு காரணமாக தோன்றிய நஞ்சை புஞ்சை வேறுபாடு மேலும் மேலும் இயற்கை விவசாயி இரசாயன விவசாயி என்ற வேறுபாட்டையும் அதிகரிக்க வைத்தது.
இயற்கை விவசாயம் என்றாலே அது நஞ்சை விவசாயிகளுக்கான ஒன்றாக மட்டுமே இருப்பதை நாம் அறிவோம். எந்த ஒரு கொள்ளு விவசாயியும் தன்னை இயற்கை விவசாயி என கூறிக் கொள்ள இயலாத அளவிலேயே அங்கக வேளாண்மை சான்று சட்டங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்து அங்கக வேளாண்மை சான்று பெற்றுள்ள ஒரு கொள்ளு விவசாயியைக் கூட எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் கூறுங்கள். 1% கரிமம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை உள்ள சூழலில் கொள்ளு விவசாயியிக்கு இது எப்படி சாத்தியம் ஆகும்?
Organic farming என்பனை வெறும் கரியை அடிப்படையாக கரிம வேளாண்மை என மொழிபெயர்த்துள்ளது பெரிய தவறு.
கரிம வேதியியல் (Organic chemistry) வேறு. Organic farming ல் வரும் Organic வேறு.
Organ - அங்கம்
நம் உடலில் கண் காது மூக்கு வாய் கை கால் விரல் பல் நாக்கு இதயம் நுரையீரல் வயிறு சிறுகுடல் பெருகுடல் என அங்கங்கள் உள்ளன. இந்த அங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒரு உடலாக இயங்குகின்றன. இந்த அங்கங்கள் அனைத்தையும் ஒரு உடலாக இணைத்து இயக்குவது எது?
உயிர்
அதாவது உயிரோட்டம்
உயிர் இல்லை என்றால் கண் காது மூக்குக்கு வேலையில்லை. நாங்கள் தனியாக இயங்குகிறோம் என அவர்களால் தனித்து இயங்க முடியாது.
ஆக உடலின் இந்த அங்கங்களை ஒன்றிணைத்து இயக்கும் அந்த உயிர் என்ற ஒன்றை அங்ககம் (Organic) என்று கூறலாம்.
அது போல உயிருள்ள உயிரோட்டமுள்ள ஒரு வேளாண்மையையே உண்மையான இயற்கை வழி வேளாண்மை என்று சிறப்பாக அதற்கான பெயராக அங்கக வேளாண்மை (Organic farming) என்று கூறலாம்.
இவ்வாறான ஒரு உயிரோட்டமுள்ள பல்லுயிரும் வாழும் ஒரு அங்கக வேளாண்மையை எப்படி செய்வது?
அந்த உயிர்களுக்கான உணவை அங்கு நீங்கள் கொடுக்க வேண்டும்.
நீங்கள் விதைக்கும் விதையில் தொடங்குகிறது அந்த உயிர்களுக்கான உணவு.
விதை
நல்ல உணவை அதாவது நல்ல விதையை அதாவது மரபு விதையை விதைக்க வேண்டும். மரபு விதையை தேடி மரபு உயிர்கள் வரும். மரபணு மாற்று விதையை தேடி புதிய உயிர்கள் வரும். புதிய உயிர்கள் தோன்றும். அவை நிலைப்புத்தன்மை அற்று விரைவில் சாகும். மரபணு மாற்று விதையை போலவே.
விதைக்கு அடுத்ததாக நாம் கவனம் செலுத்த வேண்டியது மூடாக்கு. இங்கு தான் மனித உழைப்பை சற்று ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். இதை மட்டும் சரியாக செய்து விட்டால் 4 வது விசயமான விற்பனை பற்றிய கவலை நமக்கு இருக்காது. இலவசமாக கூட வேளாண் விளைபொருளை நீங்கள் கொடுக்க துவங்குவீர்கள். அவர்கள் உங்களுக்கு இலவசமாக வேலை செய்யவும் வர துவங்குவார்கள்.
மூடாக்கு எப்படி போடுவது?
நாம் அனைவருமே சமதளமான வயலையே விரும்புகிறோம். ஆனால் மேடு பள்ளம் நிறைந்த வயலே சிறந்தது. மேட்டுப்பாத்தி முறை அமைத்துக் கொள்ளலாம். அல்லது மேடு பள்ளம் இயல்பாகவே தோன்ற துவங்கும். மேட்டு பகுதியில் மூடாக்கு போடலாம். பள்ளம் பகுதியில் தண்ணீர் பாய்ச்சலாம். விதையை பொறுத்து மேடு அல்லது பள்ளத்தில் ஊன்றலாம்.
எதனை எல்லாம் மூடாக்காக போடலாம்?
ஏற்கனவே கூறியது போல இந்த மண் சார்ந்த மட்கக் கூடிய விசயங்களை போடலாம்.
எவ்வளவு அளவு மூடாக்கு போடுவது?
எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்.
எத்தனை நாளுக்கு ஒருமுறை மூடாக்கு போடுவது?
தேவையை பொறுத்து போடலாம். தினசரியும் போடலாம். ஆண்டுக்கு ஒருமுறை கூட போடலாம்.
மூடாக்கிலுள்ள நடைமுறை சமூக சிக்கல் என்ன?
மூடாக்கின் தத்துவத்தை புரிந்து கொண்டால் நம் மண்ணுக்கேற்ப தண்ணீருக்கு ஏற்ப பயிருக்கு ஏற்ப மூடாக்கு தேர்வு செய்யலாம்.
நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது என்னவாகும்? நிலத்தில் தண்ணீர் ஓடும் போது என்னவாகும்?
தண்ணீர் தேங்கி நிற்கும் ஏரியில் நுண்துளைகள் குறைந்த களிமண் உண்டாகும். ஓடும் ஆற்றில் துளைகள் மிகுந்த மணல் உண்டாகும். தண்ணீரை தேக்கி வைப்பதால் மண் அடர்த்தி அதிகமாகும். மண்ணுயிர்களுக்கு அது சிக்கலாகவே இருக்கும். பொலபொலப்பான மண்ணில் தான் பல்லுயிர்களும் இருக்கும். செடியை சுற்றிலும் மட்கக் கூடிய விசயங்களை போட்டு அவற்றின் மூலமாக தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்வது மற்றும் பல்லுயிருக்கான உணவு வழங்குவது மற்றும் களைகளை கட்டுப்படுத்துவது என்பதே மூடாக்கின் தத்துவம்.
மட்கக் கூடிய விசயங்களைத் தான் மூடாக்காக அதாவது இலைதழைகளை தான் போட வேண்டுமா?
உயிர் மூடாக்கு கூட அமைக்கலாம். ஒரு செடி ஆரோக்கியமாக வளர அதற்கு அருகில் அதற்கு துணையாக விளங்கக் கூடிய அதனுடன் போட்டி போடாத செடியை நடலாம். இது நிலைத்த மூடாக்காக உயிர் மூடாக்காக விளங்கும். தேவையான பொழுது உயிர் மூடாக்கை முதன்மை செடிக்கு ஏற்ப சரி செய்து கொள்ளலாம்.
மூடாக்கு என்னவாகிறது?
மூடாக்கு மட்குகிறது. அதாவது மண்ணில் உள்ள உயிர்கள் மூடாக்கை உண்கின்றன.
உயிர் மூடாக்கு உயிருடன் உள்ளது. உயிர் மூடாக்குமே உயிர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது.
மூடாக்கு மட்கும் செயல், செடி வளர்ச்சி - இவை இரண்டும் என்ன தகவில் இருக்கும்?
களையை கட்டுப்படுத்தவே பெரும்பாலும் மூடாக்கு இடுகின்றனர். ஆனால் மூடாக்கு எந்த வேகத்தில் மட்குகிறதோ அந்த வேகத்தில் செடி வளரும்.
மூடாக்கை விரைவாக மட்க வைக்க ஏதாவது செய்யலாமா?
தேவைப்பட்டால் செய்யலாம். மூடாக்கு மீது மண் பரப்புவதால் விரைவில் மட்கும்.
மூடாக்கு முறையிலுள்ள ஒரு மிகப் பெரிய சவாலான விசயம் என்ன?
மூடாக்கு என்பதே பல்லுயிர்களுக்குமான ஒரு வாழ்விடத்தை உருவாக்குவதே. கொஞ்சம் பெரிய பல்லுயிர் வரும் போது தான் சிக்கல் எழுகிறது. எனவே மூடாக்கு மீது மண்ணை பரப்பி மூடாக்கின் மேற்பரப்பில் உள்ள பெரிய துளைகளை மூடலாம். இந்த தோற்றம் கொஞ்சம் நேர்த்தியையும் அளிக்கும். இதனையே கூடுதலாக செய்தால் அதுவே இருமடிப் பாத்தி ஆகிறது.
அடர்த்தியான மூடாக்கு, அடர்த்தி குறைந்த மூடாக்கு - எது சிறந்தது?
எதனை நம்மால் எளிமையாக கையாள முடிகிறதோ எது நமக்கு எளிமையாக கிடைக்கிறதோ அதனை மூடாக்காக போடலாம். இரண்டுக்கும் மட்கும் காலம் மாறுபடும். பெரிய மாறுபாடு இல்லை.
மூடாக்கு செயல் தண்ணீரின் தேவையை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறது?
மூடாக்கு அதிகமாக அதிகமாக தண்ணீரின் தேவை குறைகிறது. ஒரு கட்டத்தில் நஞ்சை வேளாண்மைக்கு இணையான விளைபொருள் மழையிலேயே மூடாக்கு முறையில் கிடைத்து விடும்.