Showing posts with label mayan. Show all posts
Showing posts with label mayan. Show all posts

மாறாத முருகனும் – மாறனும், மாயனும் தமிழ் சிறுகதைகள் தொகுப்பு - அழ.குழ.மா.அழகப்பன் tamil short story by M. Alagappan maaratha Muruganum Maranum mayanum

மாறாத முருகனும் – மாறனும், மாயனும்

-----Alcohol is injurious to health----


"முருகனுக்கு ஒரு பொண்ணு பாருங்க. இப்படியே போச்சுன்னா குடிச்சு கும்மாளமடிச்சு வீணா போயிடுவான்" என்றார் ராகவி கருப்பசாமியிடம்.

அதற்கு கருப்பசாமி, "அவனுக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான். யாருகிட்ட போய் பொண்ணு கேட்பேன். புரிஞ்சு தான் பேசுறீயா. எந்த வேலைக்கு போனாலும் 6 மாசம் கூட இருக்க மாட்றான். அவனுக்கு ஒரு பொண்ண கட்டி வச்சு அந்த பொண்ணோட வாழ்க்கையும் பாழாக்க சொல்றியா. அந்த பாவத்தை வேற சுமக்க சொல்றியா. அவன் பாட்டுக்கு இப்படியே இருக்கட்டும்."  என்றார்

      "வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகமுனு பேறு வச்சானாம். அது மாதிரில இருக்கு நீங்க சொல்றது, எவனையோ சொல்ற மாதிரி சொல்றீங்க. நம்ம பிள்ளைங்க அவன். அவனுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சா,  கண்டிப்பா அவன் நல்லா இருப்பான். போனவாரம் ஜோசியர பார்த்தப்போ அவரு சொன்னாரு அவனுக்கு ஒரு கால்கட்ட போட்டா எல்லாம் சரியாகிடும்னு" என்றார் ராகவி.

     கருப்பசாமி "அதெல்லாம் சரி நாம யார்கிட்ட போய் பொண்ணு கேட்கிறது.  இப்போ யாரு பொண்ணு தரேன்னு நிக்கிறது " என்றார்.

     "ஏங்க அதான் அந்த பத்து பிள்ளைக்காரரு இருக்கார்ல திருச்சில. அவருக்கு 6 பொண்ணுங்க 4 பசங்க. அதில 4 பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. 6 வதா பிறந்த இரட்டை பிள்ளைகள்ள ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆயிருச்சு. இன்னொரு பிள்ளைக்கு இன்னும் பண்ணல. அதுக்கடுத்தும் ஒரு பொண்ணு இருக்கு. இரண்டு பொண்ணுங்கள ஏதாவது ஒரு பொண்ணுக்கு கேளுங்க." என்றார் ராகவி.

         "அட ஆமா, சுப்பிரமணி பொண்ண சொல்றியா, பிள்ளைகளாம் தங்கமான பிள்ளைக. நம்ம பையனுக்கு தருவாங்கலானு தெரியலையே. எப்படி போய் கேட்கிறது?" என்றார் கருப்பசாமி.

          "அடுத்த வாரம் பட்டுக்கோட்டை கல்யாணத்துக்கு அவுங்க வீட்டில எல்லோரும் வருவாங்க அவுங்க அத்தை வீட்டு கல்யாணம் தான். நம்ம மூத்த பசங்கள கூட்டிட்டு போய் பேசுவோம். அவுங்களை எல்லாம் நல்லா தெரியும். நம்ம முருகன்கிட்டையும் கொஞ்சம் பொறுப்பா இருக்க சொல்வோம். பொண்ணு பாக்குறோம்னு சொன்னா சரியாகிடுவான்." என்றார் ராகவி.

         உறவினர் திருமணம் இனிதே முடிகிறது. தாலி கட்டியதும் கருப்பசாமி சுப்பிரமணியை அழைத்து  "எங்க நாலாவது பையனுக்கு வரன் பார்க்கிறோம்.  உங்கள் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா சொன்னாங்க. உங்களுக்கு சம்மதம் என்றால் ஜாதகப் பொருத்தம் பார்க்கலாமா?" என்றார்.

        "அயித்தான் உங்கள் குடும்பத்தை நல்லா தெரியும். உங்க வீட்டுக்கு எங்க பொண்ண கொடுக்கிறதுல எங்களுக்கு சந்தோசம் தான்.  உங்க மூத்த பசங்கள எனக்கு நல்லாவே தெரியும். தங்கமான பிள்ளைக. ஆனால் உங்கள் 4 வது பையனைப் பத்தி சரியா தெரியல. ஆனால் உங்கள் பையன் ஒரு நிலையான வேலையில் இல்லைனு சொல்லிட்டு இருந்தாங்க."

            "ஆமா நீங்க சொல்றது சரிதான் வேலை சரி இல்லை தான். நாங்களும் போய் ஜாதகம் பார்த்தோம். அவனுக்கு கல்யாணம் ஆயிட்டா எல்லாம் சரியாயிடுமாம். நீங்கள் வேணும்னா பையன் ஜாதகம் வாங்கிட்டு போய் பாருங்க பொருத்தம் இருந்தா அடுத்து பேசலாம். உங்களுக்கு சம்மதமா?". என்றார் கருப்பசாமி.

                  "அயித்தான் சரி ஜாதகத்தை கொடுங்க நான் பார்த்துட்டு சொல்றேன்." என்று ஜாதகத்தை வாங்கிக் கொண்டார் சுப்பிரமணி.

                 நான்கு நாட்கள் கழித்து சுப்பிரமணி தொலைபேசியில் கருப்பசாமியை அழைத்து "அயித்தான் வணக்கம், எல்லோரும் நல்லா இருக்கீங்களா சுப்பிரமணி பேசுறேன்."

              மறுமுனையில் "வணக்கம் வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கோம். அங்கே எல்லாம் எப்படி இருக்கீங்க" என்றார் கருப்பசாமி.

              "நல்லா இருக்கோம் அயித்தான். அப்புறம் ஜாதகத்தை போயி பார்த்தோம். நல்லா இருக்குனு சொன்னாங்க. ஒரு பரிகாரம் பண்ண சொன்னாங்க. அத மட்டும் பண்ணிருங்க. அத முடிச்சுட்டு நீங்கள்  ஒரு நல்ல நாள் பார்த்து பொண்ணு பார்க்க வாங்க" என்றார் சுப்பிரமணி.

              "ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா நல்ல நாள் பார்த்து வரோம்." என்றார் கருப்பசாமி.

                பத்து நாட்கள் கழித்து  கருப்பசாமி வீட்டில் எல்லோரும் ஒரு மகேந்திரா வேனில் புறப்பட்டு பொண்ணு பார்க்க போகிறார்கள். 

                  எல்லோரையும் வரவேற்று  பால்கோவா, வடை, தேநீர் என்று பெண் வீட்டார் கொடுக்க இரு குடும்பத்தாரும் மகிழ்வோடு சம்பந்தத்தை சம்மதித்தனர். 

                 முருகன் பொறுப்பாக மாறினான். தனத்திற்கும் முருகனுக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. குடிக்காமல் தினமும் வேலை முடிந்து 6 மணிக்கெல்லாம் வந்து விடுவான்.

                  இரண்டு மாதங்கள் பிறகு ‌தனம் கருவுற்றிருக்கிறதா உறுதி செய்றாங்க. 

                 மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் முருகன் நேரத்தில் வருவதை கைவிடுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக தாமதமாக வந்தவன் மறுபடியும் குடிக்கு அடிமையானான். 

                 தனத்திற்கு அப்போது தான் அவன் ஒரு குடிகாரன் என்று தெரியவந்தது. தினமும் அழுதுகொண்டே சரியாக சாப்பிடாமல் வருந்தி காலத்தை ஓட்டுகிறாள். 

                   இந்த கொடுமையை எல்லாம் பார்த்து கருப்பசாமி பலகீனமாகி இறந்து விடுகிறார்.  சிறிது நாட்களில் கணவர் இறந்தது, தன் பையன் இப்படி முழு குடிகாரனாக மாறியது, தன் மருமகளின் வாழ்க்கை வீணாகி போனதற்கு நாம் தான் காரணம் என்ற எண்ணம் இவையெல்லாம் மீளாத் துயரத்தை ஏற்படுத்தி  ராகவியும் இறந்து விடுகிறார். பிறகு சிறிது நாட்களில் தனம் அம்மா வீட்டிற்கே சொல்கிறார். கருத்தரித்து எட்டு மாதங்கள் முடியும் போதே குறைப்பிரசவத்தில் ஒரு ஆண் மகனை ஈன்றெடுக்கிறாள் தனம். அந்த குழந்தைக்கு மாயன் என்று பெயர் சூட்டுகின்றனர் "இந்த குழந்தையை எப்படி வளர்ப்பேன்" என்று தெரியலையே என்று அழுகிறாள் தனம். தனத்தின் தாய் ஆறுதல் கொடுத்து ஊட்டமிக்க உணவுகளை கொடுக்கிறார். 

       தனத்தின் தம்பி செலவு செய்து வீசா எடுத்து கொடுத்து முருகனை மலேசியாவிற்கு கூட்டிச் செல்கிறான். முருகன் ஒரு மாதம் கூட அங்கே முழுசா இல்லை. திரும்பி வந்து விட்டான். செலவு செய்த பணமனைத்தும் வீணாகி போனது. சிறிது நாட்களில் இன்னொரு குழந்தையும் பிறக்கிறது. அதற்கு மாறன் என்று பெயர் சூட்டுகின்றனர். இப்படியே ஐந்து வருடங்கள் ஓடின. 

         அம்மா வீட்டில் இருப்பதால் அடிக்கடி குடித்து விட்டு வரும் முருகனால் மனத் தாபங்கள் வருவதால் எங்கேயாவது சென்று விடலாம் என்று தன் பிள்ளை கணவரோடு கண்டனூருக்கு செல்கிறாள். 

       கண்டனூரில் அரசுப் பள்ளியில் மாயனையும் மாறனையும் தனம் சேர்த்து விடுகிறாள். மாறனும் மாயனும் சராசரியாக படித்தார்கள். மாறன் விளையாட்டில் நல்லத் திறமையாக இருந்தான். தனிக்குடித்தனம் வந்த பிறகு முழுக்குடி தினம் என்று இருந்தான் முருகன். வீட்டு வாடகை குறைவு தான். தனமும் சிக்கனமாக குடும்பத்தை நடத்துவாள். இருந்தாலும் அவர்களுக்கு முருகன் கொடுக்கும் பணம் பத்தாது. 

தினம் குடிக்கும் முருகன்

சினம் கொள்ளாது

மனம் நொந்து

தனம் தன் குடும்பத்தை நடத்தினாள். வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய தனம் இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது சமைப்பது என்று வீட்டு வேலைகளை பார்த்து சம்பாதித்து அதில் குடும்பத்தை நடத்தினாள். மாயனும் மாறனும் தெருவில் இருந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வீட்டில் வளர்த்தனர். தனம் திட்டுவாள் "உங்கள வளக்குறதே பெருசு. இதில இந்த நாய்க்குட்டியை வேற வளக்கனுமா " என்று.

      அதற்கு "தினமும் குடிச்சிட்டு வர அப்பாவை வளர்க்குற இந்த நாய்க்குட்டிக்கு சோறு போட மாட்டியா" என்பார்கள் மாறனும் மாயனும். 

    "டேய் அப்பாவ அப்படிலாம் சொல்லக் கூடாது" என்பாள் தனம். என்ன தான் கணவன் தவறு செய்தாலும் அடுத்தவர் திட்டுவதை ஏற்றுக் கொள்ள மாட்டாள். 

        தனம் மாறனிடம் "நீ பெரியவனானதும் என்னவாவாய்" என்று கேட்கிறாள். அதற்கு மாறன் "பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகனும்" என்கிறான். "போலீஸ் ஆகி என்ன செய்வ" என்றாள் தனம். "துப்பாக்கி வச்சு கெட்டவங்கள சுடணும்" என்றான். தனம் சிரித்தாள். சிறிது நேரம் கழித்து "முதல்ல எங்கப்பாவ தான் சுடுவேன்" என்றான். "ஏய் ஏண்டா அவர சுடுவ. அவரு என்ன கெட்டவரா" என்றாள் தனம். "ஆமா, தினமும் குடிச்சிட்டு வந்து உன்னை அழுக வைக்கிறாருல்ல" என்று சொன்னான். அதை கேட்டதும் தனம் பூரித்து அவனை கட்டிக் கொள்கிறாள். அப்போது அவனுக்கு 6 வயசு கூட இருக்காது. 

     தீபாவளிக்கு ட்ரஸ் மற்றும் வேறு ஏதாவது படிப்பிற்கு தேவையானதை அவர்களுடைய பெரியப்பா இடையிடையே வாங்கித் தருவார். அப்போது அவர்களிடம் அப்பாவைப் பற்றி பேசும் போதும் அந்த ட்ரஸ் பணம் வாங்கும் போதும் ரொம்பவே சங்கடப் படுவார்கள் மாறனும் மாயனும். ஒரு கட்டத்தில் தாங்கள் செல்வதை முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பார்கள்.

      மாயனும் மாறனும் சிறு வயதிலேயே பெரிய மனிதர்கள் போல ஏக்கத்தையும் அவமானத்தையும் சோகத்தையும் பசியையும் தோல்வியையும் என எல்லாவித இன்னல்களையும் அனுபவித்தனர்.  

      இருவருக்கும் புரோட்டா புடிக்கும் என்று ஆளுக்கு இரண்டு என்று தன் கையில் இருக்கும் காசை வைத்து தனம் வாங்கிக் கொடுப்பாள். 

மாறன் "அம்மா அஞ்சு புரோட்டா வாங்கி கொடுத்தா வாங்கி கொடு. இல்லைன்னா வாங்கிக் கொடுக்காத. சும்மா ஆசையை தூண்டி நாக்க சொரண்டி வைக்காத" என்பான்.


      மாயன் ஒன்பதாம் வகுப்பு வந்த பிறகு மாலை நேரத்தில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் படிப்பதை கவனிக்க யாருமில்லை. அவர்கள் படித்து எல்லாப் பாடமும் தேர்ச்சிப் பெறுவதே கடினம் தான். 

      மாறன் கால்பந்து தடகளம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினான். ஆனாலும் அவனின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு என்று யாரும் இல்லை. தனத்திற்கு அன்றாட வீட்டுத் தேவைகளை சரி செய்வதிலே கவனம் இருந்தது. முருகனுக்கு தான் சம்பாதித்து குடித்து வாழ்க்க்கையை சுயநலமாக ஓட்டுவதிலே கவனம் இருந்தது.

        பிள்ளைகளின் தனித்திறமையையோ படிப்பையோ மேம்படுத்த முடியவில்லை. மாயன் 12 ஆம் வகுப்பு முடித்ததும் தன் பெரியம்மா பையன் கோகுல் அண்ணன் உதவியால் ஈரோடு அரசுக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்கிறான். தன் அக்கா (பெரியம்மா பொண்ணு ) ஆதிரையின் கணவர் மணிகண்டன் உதவியுடன் ஒரு மருந்தகத்தில் பகுதி நேர வேலைக்கு செல்கிறான். தன் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முயற்சி செய்து அவனே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அம்மா அப்பா தம்பியை அழைத்துச் சென்றான் ஈரோட்டிற்கு. தான் படிக்கும் கல்லூரியிலே தன் தம்பி மாறனையும் சேர்த்து விட்டான் மாயன். கல்லூரியில் படிக்கும் நண்பர்களோடு  மாயனும் மாறனும் கேட்டரிங் வேலைகளுக்கு செல்வார்கள். தனமும் அவர்களோடு சில சமயங்களில் செல்வாள். மாயன் தன் அம்மாவை வீட்டு வேலைக்கு எல்லாம் போகக்கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டான். மாறன் காவல்துறை அல்லது ராணுவத்தில் எப்படியாவது சேர வேண்டும் என்று சிரத்தை எடுத்து தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுத்தான். 

      இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டனர். மாயன் பகுதி நேரமாக வேலை பார்த்த அதே மருந்தகத்தில் முழு நேர பணியில் இணைந்தான். ஐந்து வருடங்களுக்கு மேலான அனுபவம் மாயனுக்கு முன்னேற்றத்தை தந்தது. 

      மாறன் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு உடற்தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணியில் இணைந்தான். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் சியாச்சின் குளிரில் மிகவும் கஷ்டப்பட்டான். குறி வைத்து சுடுவதில் வல்லவனாக இருந்ததால் மாறன் துப்பாக்கி வீரன் (Gunner) ஆக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தான். 

      மாயன் மருந்தகத்தில் மேலாளருக்கு அடுத்த நிலையில் இருந்தான். மேலாளருக்கு வேலைப் பளு அதிகரிக்க வேலையை விட்டு நிற்க மாயனை மேலாளர் ஆக்கி விட்டார்கள். அது மாயனுக்கே ஆச்சரியமாக இருந்தது. மருந்தகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்  ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவனை விட வயதில் மூத்தவர்களுக்கும் அவனுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கும் மேலாளர் பதவி கொடுக்காமல் மாயனின் சிரத்தை வேலை பார்க்கும் விதம் பழைய மேலாளருக்கு பக்கபலமாக இருந்தது. இவையெல்லாம் தான் அவர்களுடைய நிர்வாகம் அவனை மேலாளர் ஆக்க காரணம்.

       மாறனின் பெரியப்பாவின் மகளின் மகள் (அக்கா மகள்) மாறன் மீது காதல் கொள்கிறாள். அதை மாறனும் ஏற்றுக் கொள்கிறான். இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிய வருகிறது ஆனால் மாறனின் பெரியம்மா தனத்திடம், "உன் புருஷன் ஒரு குடிகாரன். என் பேத்தியை எப்படி கொடுக்க முடியும்" என்று கேட்கிறாள்.

அதற்கு தனம், "குடிகாரன தானே எனக்கு நீங்கள் கட்டி வச்சிங்க. குடும்பத்தை கூட பார்த்துக்க துப்புல்லாதவருக்கு பொண்ணு கேட்டு அன்னைக்கு நீங்களும் தானே வந்தீங்க. இன்னைக்கு நாட்டையே பாத்துக்குற அளவுக்கு என் பிள்ளையை வளர்த்து வச்சிருக்கேன் பொண்ணு கொடுக்க முடியாது என்று சொல்றீங்க. என் பையன் கல்யாணம் பண்ணி அவன் தானே வாழ்க்கை நடத்த போறான். நீங்க ஏன் எனக்கு குடிகாரன கட்டி வச்சிங்க. உங்கள் வீட்டு பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளையோட அப்பா கூட குடிகாரனா இருக்கக் கூடாது. ஊரான் வீட்டு பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளையே குடிகாரனா இருந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்துக்கு அப்புறம் அவன் சரியா வந்திருவானு சொல்றீங்க. அவரை கட்டிகிட்டு என் பிள்ளைகளும் நானும் வாயைக் கட்டி வயித்த கட்டி வாழ்ந்துருக்கோம். விளையாடுற வயசிலே என் பிள்ளைகள் வேலைக்கு போனாங்க."  என்று சொல்லி அழுகிறாள். 

         மாறனின் பெரியம்மா‌ "தனம் நான் என்னடி பண்ணுவேன். உனக்கு கல்யாணம் நடந்தப்பவும்  நான் முடிவெடுக்கிற நிலையில் இல்லை. இப்போ என் பேத்திக்கு கல்யாணம் நடக்க போறதுக்கும் முடிவெடுக்கிற நிலையில் நான் இல்லை. புரிஞ்சுக்க. என் மருமகன் நல்லா சம்பாதித்து சொத்து சேர்த்து வச்சிருக்காரு. என் பிள்ளையை நல்ல வசதியான நல்ல பாரம்பரியமான குடும்பத்தில் கொடுக்கனும்னு சொல்றாரு. இந்த விசயம் தெரிந்ததும் ரொம்ப கோபப் படுறாரு."  என்றாள்.

         "சரி‌ நான் வரேன்" என்று அந்த இடத்தை விட்டு அழுதுகிட்டே போனாள் தனம். 

           

           மாயன் மாறனிடம்," நம்மள மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாதுடா." 

அதுக்கு மாறன், "கண்டிப்பாடா, நம்ம கல்யாணம் பண்ணா நல்ல புருசனாவும் நமக்கு குழந்தை பிறந்தா நல்ல அப்பாவாகவும் இருக்கணும் டா"  என்றான். மாயன் சிரித்துக் கொண்டே"நமக்கு யாருடா பொண்ணு தரேன்னு சொன்ன" என்றான்.  மாறன் "ஆமா டா அன்னைக்கு அவுங்க அப்பா நல்லவருனு நம்ம அப்பாவுக்கு பொண்ணு கொடுத்தாரு சுப்பிரமணி. இன்னைக்கு நம்ம அப்பா குடிகாரனு சொல்லி எவனும் தரமுடியாதுனு சொல்றானுங்க".

           "டேய் உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா ஆவூன்னா எங்க அப்பாவையும் உங்க அப்பாவையும் திட்டுறதே பொழப்பா போச்சு. போங்கடா போய் வேறு வேலை இருந்தா பாருங்கடா" என்று மனதுக்குள் வருத்தத்துடன் வெளியே சிரித்துக்கொண்டே சொன்னாள் தனம். 

           "டேய் தனத்துக்கு கோபம் வந்துருச்சு டா. வாடா போயிடலாம்" என்று சொல்லி தன் பைகளை எடுத்துக் கொண்டு விடுமுறை முடிந்து கிளம்புகிறான் மாறன். வழியனுப்ப கிளம்புகிறான் மாயன். 

       மாறன் கிளம்பிப் போன திசையில் இருந்து விழி அகலாமல் பார்த்தாள் தனம். 

                  வன்மையான துப்பாக்கியை தன் கரத்தினால் பிடித்த மாறன் மென்மையான தன் காதலியை கரம் பிடிப்பானா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

           எதுவாயினும் மாயன் ஓர் எல்லையில் தாய்க்காகவும் மாறன் ஓர் எல்லையில் தாய் மண்ணிற்காகவும்....


-

அழ.குழ.மா.அழகப்பன்

சென்னை