Showing posts with label மோகன். Show all posts
Showing posts with label மோகன். Show all posts

"நண்பேன்டா" - சிறுகதை அழ.குழ.மா.அழகப்பன், சென்னை Nanbenda a short story about friendship in Tamil

 "நண்பேன்டா" - சிறுகதை




கதிர், மோகன், யுவன், சந்திரன், நளன் ஐவரும் நல்ல நண்பர்கள்.

ஐவரும் சதுரகிரி மலையில் மலையேற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர். மோகன் ஏற்கனவே நிறைய முறை சென்றிருந்ததால் அவன் தான் தலைமை தாங்கி அழைத்துச் சென்றான். மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் நேர் வழியில் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

மோகன் மாற்றுப் பாதையில் செல்ல அனைவரையும் பணித்தான்.

"மழையினால் ஆபத்து வரும்ன்னு தானே அனுமதிக்கல. அப்புறம் எதுக்குடா ரிஸ்க்" என்றான் நளன். இயல்பாகவே நளன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன்.

"அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் நேர் வழியில் மழை பெய்யுறப்போ காட்டாற்று வெள்ளம் திடிரென ஏற்பட்டு நிறைய உயிரிழப்புகள் ஏற்படும். அதற்கு தான் அனுமதிப்பதில்லை. ஆனால் நம் செல்லும் பாதையில் தண்ணீர் வராது. ஏற்கனவே மழைக்காலத்தில் இந்த பாதை வழியாக தான் செல்வோம். டேய் பயப்படாதே, எல்லோரும் சேர்ந்தே போவோம். மேலே ஏறி திரும்பி கீழே வர்றது வரை கண்டிப்பா நான் கூடவே வருவேன் டா. எல்லோரும் டார்ச் லைட் பத்திரமா வச்சுக்கோங்க. நான் உங்களுக்கு பின்னாடியே வர்றேன். டார்ச் லைட்டை மேலே காட்டாதீங்க. வேறு ஏதாவது மிருகத்துக்கு தொந்தரவு செய்ய கூடாது."  என்றான் மோகன்.

"டேய் என்னடா மிருகம் லாம் வரும்ன்னு சொல்ற. நான் இங்கேயே இருக்கேன் டா. நீங்க போயிட்டு வாங்கடா." என்றான் நளன்.

 

"அவன் தான் கூட இருக்கான்ல. இங்கே நீ எப்படி தனியா இருப்ப" என்றான் கதிர்.

"ஆமாடா யானைலாம் சில சமயம் அடிவாரத்தில் இறங்கி வரும்டா. நீ எங்களோடயே வந்துரு. சரியா?" என்றான் மோகன்.

"என்னங்கடா உங்களோட அக்கப்போரா இருக்கு. சதுரகிரி ஆண்டவா என்னைய எப்படியாவது இவனுங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா " என்றான் நளன்.

யுவன் "பாத்தியாடா இவனை நம்மட்ட இருந்து காப்பாத்தனுமாம். எப்படி சொல்றான் பாருங்க டா" என்றான்.‌

"இவனைஅடுத்த தடவை வரும் போது கழட்டி விட்டுருவோம்டா" என்றான் சந்திரன்.

"டேய் நீங்க என்ன என்னையை விட்டுட்டு வர்றது, நானே வரமாட்டேன் டா. இது தான்  கடைசி." என்றான் நளன்.

"இப்ப இப்படி தான் சொல்லுவ மேலே போயிட்டு திரும்பி வந்த பிறகு திரும்ப வரணும்னு நீயே கண்டிப்பா சொல்லுவ. நிறைய பேர் ஏறும் போது மலைச்சு போய் அப்படி தான் சொல்லுவாங்க. இறங்குனதுக்கு பிறகு அப்பாடா ஒரு வழியா இறங்கியாச்சு கால்வலி தான் இரண்டு நாள் இருக்கும் போலனு சொல்வாங்க. அப்புறம் இரண்டு நாள் கழித்து அடுத்த வருடம் திருப்பி போவோம்னு சொல்வாங்க" என்றான் மோகன்.

"நீ என்ன சொன்னாலும் சரி நான் டுத்தெல்லாம் இங்கே வர மாட்டேன். அது உன் கூடனா எங்கேயும் வரவே மாட்டேன். உன்னை நம்பி வந்தேன் பாருசரி சரி திட்றேனு என்னைய எங்கேயும் விட்டுட்டு போயிறாதேடா, எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளை டா. என் கூடவே வா. எனக்கு முன்னாடி இரண்டு பேரு பின்னாடி இரண்டு பேர் வாங்க சரியா" என்றான் நளன்.

"செந்நாய் வந்துச்சுனா நடுவில இருக்கவுங்கல தான் பிடிக்கும். பரவாயில்லையா" என்றான் யுவன்.

"பி பாஸிட்டிவ் ரத்தம் செந்நாயிக்கு பிடிக்காதுடா" என்றான் நளன்.

"டேய் நீ பேசுறத பார்த்தா பி பாஸிட்டிவ் மாதிரி தெரியல. நெகடிவா பேசுற நெகடிவ் குருப் இருக்கும் னு நினைக்கிறேன்" என்றான் சந்திரன்.

"டேய் ரத்தத்தை பத்தியே பேசாதீங்க டா ஏதாவது அனிமல் வந்துற போகுது" என்றான் நளன்.

அனைவரும் சிரித்தனர்இப்படியே பேசிக்கொண்டே மலையை பாதியை கடந்து விட்டார்கள்

நளன் "கால் வலிக்கிறது கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருப்போம் டா " என்றான்.

சந்திரன்‌  "உட்கார்ந்தா நடக்க முடியாது. நீ உட்கார்ந்துட்டு வா நாங்க அப்படியே பொடிநடையா நடக்குறோம் என்றான் அவனோடு கதிரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

"டேய் நீங்க இப்படியே கொஞ்ச தூரம் போனா ஒரு பாறை இருக்கும் டா. அதுக்கு அடியுல ஒரு குகை மாதிரி இருக்கும். அங்கே போயி படுத்துருங்க. நான் வந்து எழுப்பி விடுறேன். எப்படியும் நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரம் ஆயிரும் போல இவனுங்க உட்கார்ந்து உட்கார்ந்து வர்றத பார்த்தா" என்றான் மோகன்.

 

      மழை மேகம் சூழ்ந்து இருந்ததால் நிலவும் விண்மீன்களும் இல்லாமல் அந்தகாரம் சூழ்ந்து இருந்தது. பக்கத்தில் யார் இருந்தாலும் தெரியாது. நளனோடு யுவனும் மோகனும் இருந்தனர். ஒருத்தர் பின்னர் ஒருத்தர் போய்க் கொண்டு இருந்தனர். யுவனின் டார்ச் லைட் அணைந்தது. நளன் மற்றும் மோகனின் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு அரை கிலோ மீட்டர் வரை நடந்து சென்றனர். பிறகு நளனின் டார்ச் லைட் அணைந்தது. இப்போது மோகனின் டார்ச் லைட் மட்டுமே இருந்தது. அதன் வெளிச்சத்தில் மூவரும் நடந்து கொண்டு இருந்தனர். நளனுக்கு இருள் மற்றும் இரவு நேரத்து ஒலியெழுப்பும் பூச்சிகளின் சத்தம் பயத்தைக் கொடுத்தது. காற்று வீசும் போதெல்லாம் ஆங்காங்கே இருக்கும் மரங்களின் அசைவும் அசைவில் ஏற்படும் சத்தமும் சற்றே பயமுறுத்தியது

"டேய் மச்சி எனக்கு பயமா இருக்கு டா என் கூடவே வாடா" என்று மோகனிடம் மெதுவாக கூறினான் நளன்.

"டேய் கவலைப்படாதே நான் உன் கூட தான் இருக்கேன். பயப்படாம போ " என்றான் மோகன்

தொண்டை வறண்டு இருந்ததால் நளன் தன் முதுகில் வைத்திருந்த பையினுள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து இருந்த கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டு தூக்கி எறிந்தான். பாட்டில் விழுந்த சத்தம் கேட்டது. அந்தகாரத்தினுள் நளனின் அசைவுகளை கணித்து அவன் தான் எதையோ தூக்கி எறிந்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான் மோகன்

"டேய் மலையில் எதுக்குடா பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுற. ஊர்ல தான் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லோரும் சேர்க்கிறோம் இங்கேயும் போட்டு இங்கே இருக்குற உயிர்களையும் துன்புறுத்தனுமா. நான் ஏற்கனவே சொன்னேன்ல எந்த குப்பையையும் போடக் கூடாதுன்னு. குறிப்பா பிளாஸ்டிக் போடக் கூடாதுன்னு.‌ ஏன்டா அது யார் மண்டையிலையும் ஏற மாட்டுது. ஒழுங்கா அத தேடி எடுத்து பையில் வைடா" என்றான் மோகன்

"டேய் உனக்கு வேற வேலையே இல்லையா? காலி பாட்டிலை தூக்கி பையில் வைக்க சொல்ற. வாடா நானே இருட்டுல பயந்துகிட்டு இருக்கேன். நீ வேற" என்று நளன் சொல்லிக்கொண்டே அவன் எறிந்த பாட்டிலின் மீது காலை வைத்து அது வழுக்கி விட சற்று தடுமாறி கீழே விழும் போது பின்னால் இருந்த மோகன் வேகமாக பிடித்து இழுத்தான்

மோகன் வேகமாக செயல்படும் அவசரத்தில் அவன் கையில் இருந்த டார்ச் லைட் நழுவி விழுந்து பாறையில் உருண்டோட "யுவா நீ அவன் கையை பிடித்து கூட்டிட்டு போ. நான் டார்ச்சை எடுத்துட்டு வரேன்" என்றான்

"நீ வாடா நாங்க வெயிட் பண்றோம்." என்றான் நளன். "நீ முதல்ல போடா" என்று நளனிடம் திரும்பி நின்று கோபமாக கத்திவிட்டு போனான் மோகன். உருண்டுக் கொண்டிருந்த டார்ச் லைட் அணைந்தது. அந்த நேரத்தில் நளனும் யுவனும் நடக்க ஆரம்பித்தனர். மெதுவாகவே நடக்க ஆரம்பித்தனர்.

திடீரென்று அவர்களுக்கு முன்னால் ஒரு வெளிச்சம் தெரிந்தது. நளன் பயந்து 'யாராக இருக்கும்' என்று யோசித்துக் கொண்டே "டேய் அது யாருடா" என்று யுவனிடம் கேட்டான்.

"டேய் கதிர் இல்லைனா சந்திரனா இருக்கும்டா" என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் மீது அந்த ஒளி திரும்பியது.

 "டேய் என்னடா பண்றீங்க இவ்வளோ நேரம் சீக்கிரம் வாங்கடா நான் மேலே வந்துட்டேன்" என்று மோகன் கத்தினான். "டேய் எப்படிடா எங்கள தாண்டி போன" என்றான் யுவன்.‌ "குறுக்கு வழி ஒன்னு இருக்கு. நீங்க மேலே ஏறி இருப்பீங்கனு வந்தா இன்னும் அங்கே நிற்கிறீங்க. சீக்கிரம் வாங்கடா. நான் கதிரையும் சந்திரனையும் பார்த்துட்டு வரேன்."  என்றான் மோகன்.

"டேய் இருடா நாங்களும் வர்றோம்" என்று கூறிக்கொண்டே நடையில் வேகம் கூட்டினான் யுவன். பின்னாடி சர சரனு ஏதோ சத்தம் கேட்க பயந்த நளன், யுவனின் வேகத்தோடு இணைந்தான்.

குகையில் சந்திரனும் கதிரும் குளிரில் நடுங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. சட்டென்று சந்திரன் எழுந்து கதிரை எழுப்பி விட்டான்.

தூக்க கலக்கத்தில் கதிர் "டேய் எதுக்குடா எழுப்பி விட்ட" என்றான். "நரி ஊளை" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் ஊளை சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து கதிரும் ஏதோ உணர தொடங்கினான். அழுகிய முட்டை வாடை திடீரென்று வந்தது. காத்து விசு விசுனு அடிக்குது

"எலியோ ஏதோ இங்கே பக்கத்துல செத்துக் கிடக்குது போல காத்து அடிக்கவும் நாறுது" என்றான் கதிர். "டேய் மோகன் சொன்னானு இங்கே வந்துட்டோம். எனக்கு பயமா இருக்குடா பேசாமா அவனுங்களோடவே வந்திருக்கலாம் போல" என்றான் சந்திரன்.

தட தட னு யாரோ நடக்குற மாதிரியே சத்தம் கேட்டது இருவருக்கும். "மோகன் பேச்சை கேட்டுட்டு அவன் கூட வந்தது தப்பா போச்சு" என்றான் சந்திரன். "அவன் என்னடா பண்ணுவான் நளன் நடக்கவே மாட்றான். அவனை மட்டும் விட்டுட்டும் வர முடியாதுல.‌" என்றான் கதிர்.‌

"டேய் என்னடா என்னைய திட்றீங்களா" என்று சத்தம் போட்டான் குகைக்கு வெளியே இருந்து மோகன். "டேய் மச்சி வந்துட்டியா, நாங்க பயந்துட்டோம் டா. நரி ஊளையிட்டுச்சு, குளிர் வேற ரொம்ப இருந்துச்சு, காத்து வேற விசுவிசுனு அடிச்சுச்சு. அதான் பேசிட்டு இருந்தோம்" என்றான்சந்திரன்.

"ஆமாடா ரொம்ப பயமா இருந்துச்சு." என்றான் கதிர்.

"சரி சரி சீக்கிரம் வாங்கடா மழை அடிச்சு ஊத்தப் போகுது. பக்கத்தில தான் கோயில் இருக்கு.‌ சீக்கரம் சாமியை கும்பிட்டுட்டு போகலாம்." என்றான் மோகன்.‌

கதிரும் சந்திரனும் வெளியே வருவதற்குள் மோகன் மேல் நோக்கி முன்னேறினான். வெளியே வந்த சந்திரனும் கதிரும் தன் கையில் வைத்திருந்த தண்ணீர் எடுத்து முகம் கழுவிட்டு மோகன் போன திசையில் நடக்கலாயினர். அவர்கள் இருவரின் டார்ச் லைட்டும் வேலை செய்யவில்லை.

 

கோயிலை அடைந்தனர். ஆனால் யாரையும் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததாலும் மழை பெய்த காரணத்தினாலும் கோயில் பூட்டியிருந்தது.

வெளியே இருந்து கும்பிட்டவாறு கிளம்பினர். "உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா ஒருத்தரை பார்த்தேன் நளனோட அம்மா அப்பா அவனை தேடி வந்திருக்காங்கலாம்டா மலையடிவாரத்தில் இருக்காங்களாம். நான் முன்னாடி போறேன் டா." இருவரிடமும் சொன்னான் மோகன்.

"என்னடா சொல்ற என்னால நம்பவே முடியல" என்றான் சந்திரன். "ஆமாடா எதுக்கு வந்தாங்கனு தெரியல நான் முன்னாடி போறேன்." என்று நகர்ந்தான் மோகன்.

     

         மழை தூவ ஆரம்பித்தது. சந்திரனும் கதிரும் அவன் பின்னாலே தொடர்ந்தனர். நளன் ஒரு பாறையில் வழுக்கி விழுற நேரத்தில சரியா மோகன் போய் பிடிச்சுறான்.‌

"பாத்துடா" என்றான்மோகன்.

"போடா, எதுக்குடா என்னை பிடிச்ச இவ்வளோ நேரம் விட்டுட்டு போயிட்ட. நான் பயந்துகிட்டே இருந்தேன்" என்றான் நளன்

"டேய் உன்னை தனியா விட்டுட்டு போன மாதிரி சொல்ற. யுவன் கூட தான வர" என்றான் மோகன்.

"சரி சரி சீக்கிரம் போலாம் கீழே என்று திரும்பச் சொன்னான் மோகன்.

" டேய் என்னடா நீங்க மட்டும் மேலே போயிட்டு கீழே போலாம்னு சொல்ற." என்றான் யுவன்

 "டேய் மேலே கோயில் பூட்டி இருக்குடா. மழையும் பெய்து. இவனோட அம்மா அப்பா இவனை தேடி வந்திருக்காங்களாம்டாஎன்றான் மோகன்.

 "என்னடா சொல்ற எங்கம்மா அப்பா எதுக்கு டா வந்தாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா" என்றான் நளன்.

"சரி பயப்படாதே வா போய் பார்க்கலாம்".

நரி ஊளையிடும் சத்தம் கேட்குது. இரவாடி பூச்சிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கு.

யுவன் "எனக்கு என்னமோ நம்ம கூட ஏதோ கண்ணுக்கு தெரியாத உருவம் கூட இருக்க மாதிரியே தெரியுதுடா" என்றான். "பயமா இருக்குடா.

நீ வேற ஏன்டா இப்படி சொல்ற." என்றான் நளன்.

அவுங்க மூன்று பேருக்கும் பின்னால் திடுதிடுனு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் சந்திரனும் கதிரும் மூச்சிரைக்க வந்தார்கள்.

"என்னடா ஆச்சு ஏன்டா இப்படி ஓடி வந்திங்க." என்றான் யுவன்.

"இல்லடா நாங்க மோகன் பின்னாடி வந்துக்கிட்டு இருந்தோம். திடீர்னு பின்னாடி யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சு" திரும்பி கொஞ்ச தூரம் ரெண்டு பேரும் நடந்தோம். அங்கே நளன் விழுந்து கிடந்தான். பயந்து எழுப்பினோம். எந்திருச்சு "ஹாஹாஹா' னு அதிர்ற மாதிரி சிரிச்சுட்டு "நாளைல இருந்து உங்களோட இருக்க மாட்டேனே" னு  சொன்னான். எங்களுக்கு பயமா இருந்துச்சு கொஞ்ச நேரத்தில் அவனை காணோம்டா அதான் வேகமா ஓடி வந்தோம்" என்றான் சந்திரன்.

"டேய் எங்கள பயமுறுத்திட்டு இங்கே வந்துட்ட" என்றான் கதிர்.

"டேய் ஏன்டா எல்லோரும் பயமுறுத்துறீங்க. நான் யுவனோட தான்டா இவ்ளோ நேரமா  இருக்கேன்" என்று அழாத குறையா சொன்னான் நளன்.

"டேய் பயப்படாதே டா நான் இருக்குற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது. ஏதோ அவனுங்க பயத்துல சொல்றாங்க. காலைல எல்லாம் சரியா போயிடும்." என்றான் மோகன்.

"அதெல்லாம் இருக்கட்டும் எங்கம்மா அப்பா எதுக்குடா வந்தாங்க?" என்றான் நளன்.

"நான் வேணும்னா முன்னாடி போய் பார்த்துட்டு வரவா" என்றான் மோகன்.

"வேண்டாம் எல்லோரும் சேர்ந்தே போவோம்" என்றான் கதிர்.‌

மோகன் முன்னே செல்ல அடுத்து கதிர் நளன் சந்திரன் யுவன் என்று போய்க் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் அமைதியாக சென்ற பின் மோகன் "என்னடா எல்லோரும் அமைதியா வர்றீங்க, ஏதாவது பேசிட்டே போகலாம்ல" என்றான்.

"எங்களுக்கு மூச்சு வாங்குது நீயே பேசுடா" என்றான் கதிர்.

"எப்பவும் ஒற்றுமையா இருக்கனும்டா.‌ அப்பதான் நிறைய சாதிக்கலாம். பாவம் டா எங்கம்மா அப்பா அவுங்களுக்கு நான் எதுவுமே பெருசா செய்யல" என்றான் மோகன்.

 "டேய் ஏன்டா வருத்தப் படுற இப்போ தான் எல்லோரும் ஓரளவுக்கு செட்டில் ஆயிருக்கோம். அம்மா அப்பாவுக்கு நாம சூப்பரா செய்வோம்டா" என்றான் சந்திரன்.

கொஞ்சம் விடிந்தது. மலையடிவாரமும் நெருங்கியது.

"சரிடா விடிஞ்சுருச்சு பயப்படாம இறங்குங்க பக்கத்தில வந்தாச்சு. நான் போயி நளன் அம்மா அப்பா வை பார்க்கிறேன்." என்று சொல்லி அவன் டார்ச் லைட்டை அணைத்து விட்டு வேகமாக இறங்கினான் மோகன்.

           பொழுது விடிந்தது. அடிவாரத்தை தொட்டனர். "அங்கே பரபரப்பாக அவர்களை பார்த்து நீங்க ஏம்பா மேலே போனீங்க" என்று ஒருவர் சொன்னார்.‌ அருகில் இருந்தவர்கள் சலசலத்தனர். சிறிது நேரம் நடந்து சென்றால் தூரத்தில் மோகனின் அம்மா அப்பா இருந்தாங்க.

"என்னடா மோகனோட அம்மா அப்பா வேற வந்திருக்காங்க. உங்க அம்மா அப்பா வேற வந்தாங்கனு சொன்னான் மோகன்." என்றான் யுவன் நளனிடம்.

"ஆமாடா என்னனு தெரியலையே என்று அவர்கள் அருகில் சென்றால் அவர்கள் தலையில் அடித்து கொண்டு கீழே பார்த்து அழுகிறார்கள். இவர்களுக்கு ஒன்றுமே புரியல. கீழே பார்த்தால் மோகன் கிடந்தான். கதிர் அருகில் இருந்தவர்களை விசாரித்தான் "என்ன ஆச்சு? என்று.

அவர்கள், "நேற்று குறுக்கு வழியில் கொஞ்சம் பேரு மலையேறி போனாங்க. மூன்றாவது மலை ஏறும் போது வழுக்கி  விழுந்து இறந்து கிடந்தான். தகவல் தெரிந்து தூக்கிட்டு வந்தாங்க" என்றார்கள்.

"ஐயா எத்தனை மணி இருக்கும்" யுவன். "அவர் இறந்தது இரவு 11 மணி இருக்கும்" என்றார்கள். எல்லோரும் ஒருத்தர ஒருத்தர் அதிர்ச்சியா பார்க்கிறாங்க.

"11 மணிக்கே இறந்துட்டானா. ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர நம்ம கூடவே இருந்தானேடா. அதும் நமக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் வந்து காப்பாத்தினானே. செத்த பிறகும் அவன் சொன்ன மாதிரியே நம்மள பத்திரமா கூட்டிட்டு வந்தானேடா" என்று அழுகிறான் கதிர்.

அவனோட அம்மா அப்பாவ தான்டா என்னோட அம்மா அப்பானு சொல்லிருக்கான். இனிமே அவுங்களை நான் தான் டா பாத்துக்குவேன்" என்று அழுதான் நளன்.

"அண்ணே அவன் எங்கேணே இறந்து கிடந்தான்" என்று பக்கத்தில் இருந்தவரிடம் சந்திரன் கேட்டான். அவன் மூனாவது மலைகிட்ட ஒரு இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில் டார்ச் லைட் லாம் கிடந்துச்சு. அது பக்கத்தில் கிடந்தான். பிளாஸ்டிக் பாட்டிலை மிதிச்சு வழுக்கி விழுந்திருக்கலாம்னு சொல்லிக்கிறாங்க" என்றார் அவர்.

"அய்யய்யோ அவன் சாவுக்கு நான் தான் காரணமா" என்று அழுது விளக்கினான் நளன். "என்னால செத்தாலும் என் கூடவே இருந்து பாத்துக்கிட்டானே அவன் விட்டுட்டு போனதுக்கு திட்டுனேனே" என்று அழுது புலம்புகிறான்.

அவர்கள் நான்கு பேருக்கு மட்டுமே மீண்டும் வந்து "நண்பேன்டா" என்று வழக்கமாக சொல்லும் ஒற்றை வார்த்தையை சொல்லி காற்றில் கரைந்தான் மோகன்.

கதை முற்றும். நட்பு முற்றாது

-

அழ.குழ.மா.அழகப்பன்

சென்னை