மாற்றத்தை நோக்கி

 திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா விதை சேகரிப்பில் முக்கிய பங்காற்றிவருகிறார். தன் கணவர் தொழில் முனைபவர்,1 மகன் , 1 மகள் இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் தன் வீட்டு தேவைக்காக வீட்டு மாடியிலும் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய இடத்திலும் தங்கள் குடும்பத்திற்கான காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தார்.  

     

         அதில் சேகரித்த விதைகளை விதைக்க வீட்டில் உள்ள இடம் போதவில்லை.பிறகு தன் வீட்டின் அருகில் உள்ள நண்பரின் 3 ½ சென்ட் இடத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார். இந்த 3½ சென்ட் இடத்தில் குடும்பத்திற்கான உணவு தேவையை நிறைவு செய்துள்ளார்.இப்பொழுது தமிழகம் முழுக்க விதை பரவலாக்கம் செய்து கொண்டு இருக்கிறார்.  தன் வேலையையும், வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு , குழந்தைகளையும் கவனித்து கொண்டு தோட்டத்தையும்  பராமரித்து வருகிறார். 

       

           பெண்கள் கைகளில் தான் விதை இருக்க வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா கூறுவதிற்கு இணங்க, இவர் விதைகளை பேராயுதமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதில் உள்ள ஆர்வத்தில் தன் வேலையை விட்டு  தன் முழு நேரத்தையும்  தன் குடும்பத்துடனும் விதைகளினுடனும் பயணித்து வருகிறார்.வீட்டை சுற்றி உள்ள இடங்களில்  பல வகை சுரைக்காய்கள், 50 திற்கும் மேல் கத்தரி வகைகள்,  30 வகை தக்காளி,  பலவகை மிளகாய், 33 வகை வெண்டை,  உள்ளடக்கிய கீரை, காய், கிழங்கு, கனிகள், மூலிகைகள், நெற்பவழம் போன்ற அறிய தானியங்கள் உட்பட்ட  500 விதமான தாவர வகைகள் விதை உற்பத்தியுடன் இயற்கை முறையில் பராமரித்து வருகிறார். ஒரு முறை நட்ட ரகங்களை அடுத்தமுறை நடாமல் ரகத்துக்கு ஒரு செடி என்று வளர்ந்து ரகங்களை காப்பதோடு விதைகளை இனகலப்பு ஆகாமல் எடுத்து பரவலாக்கம் செய்துள்ளார்.

    

          வருடத்திற்கு 1000 பேர்க்கு மேல் இவர் மூலம் நாட்டு விதைகள் பெற்று தங்கள் வீடுகளில் காய்கறிகளை அறுவடை செய்து கொண்டு உள்ளார்கள். தன்னிடம் விதைகள் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல், எப்பொழுது விதை வருகிறதோ அப்பொழுது பகிர்வார். அவருக்கு உள்ள வேலை பளுவை பொருட்படுத்தாமல் இதில் உள்ள ஆர்வத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள விதை சேகரிப்பாளர்களிடம் இருந்து நாட்டு விதைகள் பரிமாறி கொண்டு வருகிறார். இன்றைக்கு தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத விதை சேகரிக்கும் பெண்மணியாக திகழ்கிறார்.  3½ சென்டில் செய்ததை இப்பொழுது   3 எக்கர்க்கு செய்ய தொடங்கியுள்ளார். 

    

No comments:

Post a Comment